Skip links

TISL நிறுவனமானது மனித நோயெதிர்ப்பு புரதம் (இம்யூனோகுளோபுலின் – IG) மற்றும் சர்ச்சைக்குரிய மருந்துப் பொருட்கள் தொடர்பாக அடிப்படை உரிமை மனுத் தாக்கல்

நீதிமன்றத் தலையீட்டின் நோக்கங்களாவன:

  • மனித-IG மற்றும் பல மருந்துகளை போட்டி ஏலங்கள் இன்றி இறக்குமதி செய்வது தவறானது என்றும் சட்டவிரோதமானது என்றும் அறிவித்தல்
  • பதிவு செய்வதிலிருந்து விலக்களிப்பதை மறுபரிசீலனை செய்தல்
  • கணக்காய்வாளர் நாயகத்தினால் விசேட விசாரணை நடத்த அறிவுறுத்தல்
  • வழக்கு விசாரணைகளுக்கு அறிவுறுத்துதல்
  • அரசுக்கு அல்லது பொதுமக்களுக்கு ஏற்படும் செலவினங்களை நேரடியாக மீளப்பெறல் மற்றும் இழப்பீடு வழங்குதல்

மனித நோயெதிர்ப்புப் புரதம் (மனித-IG) உள்ளிட்ட மருத்துவப் பொருட்களின் சமீபத்திய சர்ச்சைக்குரிய கொள்முதல்கள் சுகாதாரத் துறையிலும் பொது மக்களிலும் ஏற்படுத்தும் கடுமையான விளைவுகளை முன்னிலைப்படுத்தி, ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் ஏப்ரல் 16ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் ஓர் அடிப்படை உரிமை மனுவை (SCFR/ 99/2024) தாக்கல் செய்தது.

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள 66 பிரதிவாதிகளில் கெபினட் அமைச்சரவை அமைச்சர்கள், சுகாதாரத் துறையில் பதவியில் உள்ளவர்கள் மற்றும் முன்னாள் உயர் அதிகாரிகள், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹிலிய ராம்புக்வெல்ல, மனித-IGயின் சர்ச்சைக்குரிய மருந்து விநியோகத்தில் ஈடுபட்டுள்ள கம்பெனிகள், திறைசேரி செயலாளர், கணக்காய்வாளர் நாயகம், சுங்கத்துறை பணிப்பாளர் நாயகம், பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், CIABOC உறுப்பினர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் அடங்குவர்.

பொது வளங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை, பிரஜைகளின் அடிப்படை உரிமைகளை மீறியமைக்காகவும் பொறுப்புக்கூற வேண்டும் என்ற நோக்கத்துடன் பொது நலன் கருதி அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐஸொலெஸ் பயோடெக் பார்மா ஏஜி (PVT) LTD (Isolez Biotech Pharma AG (Pvt) Ltd), லைவால்த் பயோபார்மா (PVT) LTD (Livealth BioPharma (Pvt) Ltd), யடென் இன்டர்நெஷனல் (PVT) LTD (Yaden International (Pvt) Ltd), நந்தனி மெடிக்கல் லேபொரேட்டரிஸ் (PVT) LTD (Nandani Medical Laboratories (Pvt) Ltd), டிவைன் லெபொரேட்டரிஸ் (PVT) LTD (Divine Laboratories (Pvt) Ltd), குல்பிக் பயோசயின்சஸ் LTD (Gulfic Biosciences Limited), நோவாசெம் லங்கா PVT) LTD (Novachem Lanka (Pvt) Ltd) மற்றும் ஸ்லிம் பார்மாசூட்டிகல்ஸ் (PVT) LTD (Slim Pharmaceuticals (Pvt) Ltd) ஆகிய நிறுவனங்களிடமிருந்து மருத்துவப் பொருட்களை கொள்முதல் செய்ய அமைச்சரவை மற்றும் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டதாகக் கூறப்படும் முடிவு தவறானது, சட்டவிரோதமானது, சட்டத்துக்குப் புறம்பானது, செல்லுபடியற்றது மற்றும் சட்டப்படி செல்லத் தகாதது என நீதிமன்றம் பிரகடனப்படுத்த வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

பிரதிவாதிகளின் செயல்கள் அல்லது செயலற்ற தன்மை அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதாரர்கள் வாதிடுகின்றனர். அதன் மூலம் மருத்துவப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காகப் பதிவு செய்வதிலிருந்து விலக்களிப்பதை மறுபரிசீலனை செய்யவும் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த, சட்டம் மற்றும் விதிமுறைகளால் விதிக்கப்படும் நடைமுறைப் பாதுகாப்புகளைப் பின்பற்றுமாறு பிரதிவாதிகளை அறிவுறுத்தவும் மனுதாரர்கள் நீதிமன்றத்தின் தலையீட்டைக் கோருகின்றனர்.

சுகாதாரத் துறையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் அவசரநிலை‘ பெரும்பாலும் தவறான நிர்வாகத்தால் ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.

மேலும்இத்தகைய தவறான நோக்கங்களுக்காக அவசரநிலையை ஏற்படுத்திய சுகாதார அமைச்சில் பதவி வகிக்கும் தனிநபர்களின் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டுகிறதா என்ற கவலையை எழுப்புகிறது” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்திய கடன் வரியின் கீழ் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்யும் போது சட்டத்திற்கு இணங்காமை மற்றும் சட்டத்தை முற்றிலும் புறக்கணித்தமை ஆகிய காரணங்களுக்காக, 2023 பெப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட TISL-இன் நடைமுறையிலுள்ள மனுவுக்கு (SCFR/65/2023) மேலதிகமாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

TISL, தனது சமீபத்திய அடிப்படை உரிமை மனுவில், பதிவு விலக்கு வழங்கப்பட்ட மருத்துவ விநியோகஸ்தர்களிடமிருந்து மருத்துவப் பொருட்களைப் பெறுவதற்கான தீர்மானம் தொடர்பாக விஷேடமாக விசாரணை நடத்துமாறு கணக்காய்வாளர் நாயகத்துக்கு உத்தரவிடவும், அவர்கள் மூலம் மருத்துவப் பொருட்களைப் பெறுவதால் ஏற்படும் செலவைக் கணக்கிடவும் நீதிமன்றத்தைக் கோருகிறது.

அத்துடன், பதிவு விலக்குகளைப் பயன்படுத்தி மருத்துவப் பொருட்களை வாங்குவதன் மூலம் நிதி அல்லது பிற நன்மைகளைப் பெற்றதாக அடையாளம் காணப்பட்ட நபர்கள் மீது வழக்குத் தொடர சட்டமா அதிபருக்கு (AG) உத்தரவிடுமாறு அது நீதிமன்றத்தைக் கோருகிறது. மேலும், அரசுக்கு அல்லது பொதுமக்களுக்கு ஏற்படும் செலவுகளை  மீளப்பெற சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறும், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து இழப்பீடு பெறுமாறும் நீதிமன்றத்தை அது கோருகிறது.

மனுவை இங்கே பார்வையிடலாம்.

Leave a comment

This website uses cookies to improve your web experience.