Skip links

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனத்தினால் மதிப்பாய்வு செய்யப்பட்டு தொகுக்கப்பட்ட “வர்த்தக நிறுவனங்களின்  அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மை” (TRAC) ல்:  ஐந்து நிறுவனங்களிடையே முதல் இடம் பகிரப்பட்டது.

கடந்த வர்த்தக நிறுவனங்களின்  அறிக்கையிடலின் மதிப்பீடுகளில் வெளிப்படைத்தன்மையில் முதலிடத்தைப் பெற்ற ஜோன் கீல்ஸ் மற்றும் டீஜே லங்கா ஆகிய கம்பெனிகளுடன்  இந்த ஆண்டு  சிலான் டுப்பாக்கோ, டயலொக் ஆக்சியாட்டா மற்றும் டில்மா சிலோன் டீ கம்பனி ஆகியன இணைந்து வர்த்தக நிறுவனங்களின்  அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மைக்கான முழு மதிப்பெண்ணைப் பெற்றுள்ளன. ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) அண்மையில் மதிப்பாய்வு செய்யப்பட்ட TRAC மதிப்பீட்டின்படி 27 வர்த்தக நிறுவனங்களின்  அறிக்கையிடலில் ‘குறிப்பிடத்தக்க வகையில் வெளிப்படையானவை’ எனக் கருதப்படுகின்றன.

TISL ஆனது 2020 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் வர்த்தக நிறுவனங்களின் அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மை (TRAC) மதிப்பீட்டை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு முதன்முறையாக, இலங்கையில் உள்ள சிறந்த முதல் 125 பொது நிறுவனங்களில் (ஜூலை 5, 2023 நிலவரப்படி கொழும்பு பங்குச் சந்தையின் சந்தை மூலதனத்தின் அடிப்படையில்) கூட்டு நிறுவன அறிக்கையிடலில் ஐந்து கம்பனிகள் முதல் இடத்தைப் பெற்றுள்ளன.

இன்று (பிப்ரவரி 15, 2024) வெளியிடப்பட்ட TRAC 2023 அறிக்கையில், இந்த ஆண்டு மதிப்பிடப்பட்ட நிறுவனங்கள் சராசரியாக 10க்கு 5.85 மதிப்பெண்களைப் பெற்றுள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது. நிறுவன வெளிப்படைத்தன்மை மற்றும் அறிக்கையிடல் நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில், கடந்த ஆண்டு மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில் இங்கு ஒரு சிறிய முன்னேற்றத்தைக் காணலாம்.

TRAC 2023 அறிக்கையின் ஊடாக, இலங்கையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஊழலைத் தடுப்பதில் முக்கியமான பகுதிகளில் வெளிப்படுத்தும் நடைமுறைகள் குறித்து மதிப்பிடப்பட்டுள்ளன. இதில் நிறுவனத்தின் ஊழலுக்கெதிரான செயற்பாடுகள், நிறுவனப் பங்குகளின் வெளிப்படைத்தன்மை, முக்கியமான நிதித் தகவல்களை வெளிப்படுத்துதல், பால்நிலை மற்றும் பாகுபாடற்ற கொள்கைகள் பற்றிய அறிக்கையிடல், நாடுகளுக்கிடையிலான அறிக்கையிடல் மற்றும் அரச கொள்முதல் தொடர்பான ஒப்பந்தங்கள் பற்றிய அறிக்கைகள் அவற்றில் உள்ளடங்கும்.

பொதுவில் கிடைக்கப்பெறக்கூடிய கம்பனிகளின்  தகவல்களின் அடிப்படையில் நிறுவனங்கள் 0-10 (10   அதிகூடிய மற்றும் 0 அதிகுறைந்த) என்ற அளவில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.  மேலும் அவர்களின் நிறுவன வெளிப்பாடுகளில் வெளிப்படைத்தன்மையின் நிலைக்கு ஏற்ப “முழுமையான வெளிப்படைத்தன்மை, கணிசமான வெளிப்படைத்தன்மை, மிதமான வெளிப்படைத்தன்மை, ஓரளவான  வெளிப்படைத்தன்மை, பகுதியளவு வெளிப்படைத்தன்மை, குறைந்தபட்ச வெளிப்படைத்தன்மை” என ஆறு பிரிவுகளாக  வகைப்படுத்தப்பட்டன.  நிறுவனங்கள் தங்கள் ஆரம்ப மதிப்பெண்கள் குறித்து கருத்து தெரிவிக்க வாய்ப்பும் வழங்கப்பட்டன.

மதிப்பீட்டில் அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்களை பாராட்டும் அதே வேளையில், நிறுவனங்களின் ஊழலுக்கு எதிரான கொள்கைகள் அல்லது திட்டங்களை செயற்படுத்தல் தொடர்பில் TRAC அறிக்கை மதிப்பாய்வு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் குறைந்த புள்ளி என்பது ஒரு நிறுவனத்தில் ஊழலுக்கு எதிராக வலுவான திட்டங்கள் கொண்டிருக்கவில்லை என்பதையோ அல்லது நிறுவன மட்டத்தில் நடைபெறும் தவறுகளை மதிப்பாய்வு செய்து வழங்கப்பட்டதாகவோ கருதப்படுவதில்லை. மேலும் கூடிய புள்ளி என்பது தகவல்களை வெளிப்படுத்தலில் வலுவான கட்டமைப்பினை கொண்டுள்ளதை குறிப்பிடலாம். ஆனால் இது அவர்களது வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகளின் வெற்றியை பிரதிபலிக்கவில்லை.

TRAC மதிப்பீடுகள் வணிகத்தில் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையின் தரத்தை மேம்படுத்த நிறுவனங்களை ஊக்குவிப்பதே TISL இன் எதிர்பார்ப்பாகும்.  ஊழலுக்கு எதிரான நடைமுறைகளை இணைத்து வலுப்படுத்த நிறுவனங்களை ஊக்குவிப்பதும், தகவல் வெளிப்படுத்தல் நடைமுறைகளை மேம்படுத்தலுமே இந்த மதிப்பீட்டின் மிக முக்கியமான நோக்கமாகும்.

பொதுத்துறைகளில் ஊழல் எவ்வளவு அபாயகரமான பிரச்சனையாக இருக்கிறதோ, அதேபோல், இலங்கையில் தனியார் துறையானது பொதுவாக ஊழலை ஊக்குவிக்கும் துறையாகவே கருதப்படுகிறது.  2023 ஆம் ஆண்டு புதிதாக இயற்றப்பட்ட ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில், இலங்கையில் முதன்முறையாக தனியார் துறையில் இலஞ்சம் sதண்டனைக்குரிய குற்றமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பங்குச் சந்தையின் திருத்தப்பட்ட பட்டியல் விதிகளால் இது மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது, இதன் கீழ் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் முறைகேடுகளை வெளிப்படுத்துவதற்கான கொள்கைகள், லஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரான கொள்கைகளை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதோடு அந்த கொள்கைகள் பற்றிய வெளிப்படுத்தல்களை செய்ய வேண்டும்.

TISL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான நதிஷானி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “TRAC மதிப்பீடுகள் மூலம் வெளிப்படைத்தன்மையை மதிப்பிடுவது இலங்கையில் உள்ள அனைத்து பெரும் ஊழல் வழக்குகளுக்கும் தீர்வுகாணாது, மேலும் TISL ஆனது ஆய்வுகளை மேற்கொள்கிறது, வழக்குகளில் ஈடுபடுகிறது மற்றும் தனியார் துறைக்கு இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரான பயிற்சிகள் போன்ற பிற வேலைத்திட்டங்கள் மற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஊழல் பிரச்சினைக்குத் தீர்வு காண விழிப்புணர்வுகளை நடத்துகிறோம். இருந்தபோதிலும், பெருநிறுவன வெளிப்படைத்தன்மை என்பது நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்குள் ஊழலின் அபாயத்தைக் குறைக்க எடுக்கக்கூடிய ஒரு படியாகும் ” என அவர் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில் “நிறுவனங்கள் புதிய ஒழுங்குமுறை தரநிலைகளுக்கு கட்டுப்பட வேண்டும், அதே நேரத்தில் குறைந்தபட்ச தேவைகளை விட உயர் தரத்தை பேணுவதற்கு சுய கட்டுப்பாடுகள் அவசியம். எனவே, வர்த்தக நிறுவனங்களின்  அறிக்கைகளை  மற்றும் தங்கள் கொள்கைகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்வது அவர்களின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கு வலுவான உந்துதலாக செயல்படுகிறது.

Leave a comment

This website uses cookies to improve your web experience.